ஈரோடு மாவட்டத்தில் ரோட்டரி தன்னார்வ சங்கத்தின் சார்பில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புற்றுநோய் மொபைல் வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதுதான் இதன் நோக்கம்.
புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிவதற்கான அனைத்து வசதிகளும் இந்த வாகனத்தில் உள்ளது. இந்த முகாம் குறித்து ரோட்டரி சங்கத்தினர் கூறுகையில், தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் 40 வயதிற்கு மேலுள்ள பெண்கள் 1.4 சதவீதம் பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவதாகவும், குறிப்பாக மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகளால் பெண்கள் அதிகளவில் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புற்றுநோய் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கு உதவி புரியவும் ரோட்டரி சங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.







