கல்லூரிகளில் சேர்ந்து, பின்பு பல்வேறு காரணங்களால் விலகிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவதுமாக திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் சேர்ந்து, பின்பு பல்வேறு காரணங்களுக்காக கல்லூரிகளில் இருந்து விலகிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுவதுமாக திருப்பி வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவிட்டுள்ளது.
மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அப்போது செலுத்திய முழு கல்விக் கட்டணத்தையும் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும் என்றும், செயல்பாட்டு கட்டணமாக ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்து கொள்ளாலம் என அறிவுறுத்தியுள்ளது. கல்விக் கட்டணத்தை திரும்ப ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வரும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது ஏதேனும் புகார் பெறப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் UGC எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா காரணமாக, நடப்பு கல்வியாண்டுக்கு மட்டும் முழுக் கட்டணத்தை திரும்ப வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், வரும் காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் இருக்காது என்றும் UGC தெரிவித்துள்ளது.







