நாடாளுமன்றத்தை பல ஆயிரம் கோடி ரூபாயில் கட்டும் மத்திய அரசு அதற்கு பதிலாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சிறுபான்மையினர் அணி கருத்தரங்கம் நடைபெற்றது. நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில், நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வரும் திட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு கொடுத்து, இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நல்ல ஆட்சி மலர்ந்திட, இன்னும் 4 மாதங்கள் தான் உள்ளது என்றும், பல ஆயிரம் கோடியில் நாடாளுமன்றத்தை கட்ட நினைக்கும் மத்திய அரசு, அதற்கு பதிலாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்திடுமா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.







