கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 3 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், தரமான அரிசியை வழங்கும் விதத்தில் நிறம் பிரிக்கும் இயந்திரங்களை நிறுவ, தனியார் அரவை முகவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளின் செயல்பாடுகள் மற்றும் பொது விநியோக திட்ட பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களின் இயக்கம் செம்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த மின்னணு கண்காணிப்பு முறை முழுமையாக அமல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் கடந்த 17-ம் தேதி வரை பொது விநியோக திட்ட பொருட்களான ரேசன் அரிசி உள்ளிட்டவற்றை கடத்தியதாக 2 ஆயிரத்து 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த மே மாதம் 7 ம் தேதியில் இருந்து ஜூலை 31-ம் தேதி வரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







