பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு – டெல்லி நீதிமன்றம் ஒத்திவைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகள்…

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதாக கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவானது கடந்த ஏப். 15ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, வழக்கறிஞர் ஆனந்த் எஸ்.ஜோன்டேல் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது மத ரீதியாக பிரசாரம் செய்ததாகவும் இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் பிரதமர் மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கடவுள் மற்றும் கோயில்கள் குறித்து பேசுவது வாக்காளர்களிடையே சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று (ஏப். 26) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிபதி இன்று விடுமுறையில் சென்றதால் வழக்கின் விசாரணயை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக இந்த வழக்கு ஏப்ரல் 26-ம் தேதி விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.