வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை விவசாயிகள் வீடு திரும்பப்போவதில்லை என்பதை பிரதமர் மோடிக்கு சொல்ல விரும்புவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என குடியரசு தலைவரிடம் எடுத்துரைத்ததாக கூறினார்.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்டி வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பணம் சம்பாதிக்கும் முதலாளி நண்பர்களுக்கு எதிராக யார் செயல்படுகிறார்களோ அவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் பேசுகிறார் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதில் விவசாயிகளும், தொழிலாளர்களும் மற்றும் மோகன் பகவத்தும் அடங்குவர் என விமர்சித்தார்.
முன்னதாக, குடியரசு தலைவரை சந்திக்க தடையை மீறி பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.







