சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் வளர்ச்சி
மற்றும் செய்தி துறை சார்பில், பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அரசு அச்சக பணியாளர்களுக்கு ரூ.34.49 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பணியின் போது உயிர் இழந்த அரசு அச்சக பணியாளர் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, பல்வேறு செய்தியாளர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் அறிக்கையில் அறிவித்தது படி, பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கும்
பணி இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி
வருகிறது. கொரோனா காலகட்டத்தில் செய்தியாளர்களுக்கு 5000 ரூபாய் உதவி தொகை
வழங்கப்பட்டது. என்றும் பத்திரிக்கையாளர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு
இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சென்னை தண்டையார் பேட்டை பகுதியில் அமையவுள்ள அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்புக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.







