பிச்சைக்காரன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள நானா புளுகு வீடியோ பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகரானார். தொடர்ந்து சசி இயக்கத்தில் ‘பிச்சைக்காரன்’ எனும் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பெரும் வெற்றியை அளித்தது. தற்போது ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தை தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.
ஏற்கனவே பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் திரைப்படத்துக்கு தடை கோரியும், ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கோரியும், சென்னையை சேர்ந்த மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜகணபதி என்பவர் வழக்கு தொடுத்து மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.செளந்தா், ‘பிச்சைக்காரன்-2’ படத்தை வெளியிட அனுமதி அளித்தாா். படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பிச்சைக்காரன் 2 படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்டது. பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள நானா புளுகு வீடியோ பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.







