நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை நாகை மாவட்டத்திற்கு சென்றார். வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டார். தொடர்ந்து நாகூர் தர்காவிலும் முதலமைச்சர் வழிபட்டார். அண்மையில் பெய்த கனமழையால் தர்காவின் குளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் அப்போது ஆய்வு செய்தார். பின்னர் கருங்கன்னி பகுதிக்கு சென்று, மழையால் சேதமான பயிர்களை ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தில் ஆய்வுக்குப்பின், திருவாரூர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொக்காலக்குடியில் சேதமடைந்த பயிர்களை வயலில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் தென்னவராயன் பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது புதிய வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.







