பெற்ற தாயை இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த மகன், எந்த சலனமும் இன்றி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
சென்னை, மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான ஆதியம்மாள். இவருக்கு மகேஷ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் மாடியில் உள்ள குடிசை வீட்டில் ஆதியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து ஆதியம்மாள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து மாடியில் உள்ள குடிசை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கோயம்பேடு காவல்நிலையத்திற்கு அவர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆதியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியபோது, ஆதியம்மாளின் மகன் மகேஷ் குமார், கீழே உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து, விசாரணை நடத்தியபோது, பெரிதாக சிரமம் வைக்காமல், பெற்ற தாயை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மகேஷ்குமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மதுபோதைக்கு அடிமையான மகேஷ்குமார், மது அருந்திவிட்டு தகராறு செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இவரது கொடுமை பொறுக்க முடியாமல், மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.
மதுரை நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த மகேஷ்குமார், அங்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், சென்னைக்கு வந்து தங்கியிருந்துள்ளார். வேலைக்கு எதுவும் செல்லாத மகேஷ்குமார், தினமும் குடித்துவிட்டு வந்து தாயுடனும் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான், வழக்கம் போல இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ்குமார், மேலும் குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆதியம்மாள் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த மகேஷ்குமார் வீட்டில் இருந்த இரும்பு குழாயை எடுத்து தாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். சிறிது நேரம் அங்கேயே இருந்த மகேஷ்குமார், அதன் பின்னர் கீழே உள்ள வீட்டில் வந்து போதையில் படுத்து தூங்கியுள்ளார். இதையடுத்து, மகேஷ்குமாரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







