ஏன் தாமதமாக சமையல் செய்கிறாய் என மனைவியை கேட்டுள்ளார் கணவர். இந்த சிறு பொறி, பெரும் பிரச்சினைக்கு தீ மூட்டியுள்ளது. 4 மாத கைக்குழந்தையுடன் மனைவி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள மேலமுடி மன்னார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் முருகன். இவருக்கு திருமணமாகி குருதேவி என்ற மனைவியும், 4 மாத கைக்குழந்தையும் இருந்தனர். தொழிலாளியான பொன் முருகன் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, குருதேவி சமையல் செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்றைக்காவது சமையல் சீக்கிரமாக செய்து வைத்திருக்கக் கூடாதா என பொன் முருகன் மனைவியை கேட்டுள்ளார். கைக்குழந்தை வைத்துக் கொண்டு வேலை செய்வதில் தமக்கு சிரமம் இருப்பதாகக் கூறியுள்ளார் குருதேவி. இப்படி சாதாரணமாக தொடங்கிய பேச்சு முற்றி வாக்குவாதமாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் சண்டையாக மாற, ஆத்திரமடைந்த குருதேவி, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். இதில், அருகில் இருந்த 4 மாத கைக்குழந்தை தீயில் கருகியது. இந்த பயங்கர சம்பவத்தில், குருதேவியும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிர்ச்சியைடைந்த பொன் முருகனும், அவரது உறவினர்களும், இந்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக சடலங்களை தகனம் செய்ய முயன்றுள்ளனர். எனினும், இதுகுறித்து உறவினர் ஒருவர் கமுதி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குருதேவி மற்றும் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கணவர் பொன் முருகன் மற்றும் உறவினர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







