ரூ.11.74 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை மற்றும்
கால்வாய் பணி தரமற்றதாக இருப்பதாக கூறி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்புராம்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ரூ.11 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 100 மீட்டர் அளவிற்கு சிமெண்ட் சாலை மற்றும் அதனுடன் கூடிய கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட சுமார் நான்கு மாதங்களே ஆன நிலையில் சாலையில் இருந்த ஜல்லிகள் பெயர்ந்தும் மணல் காற்றில் பறந்துவிடும் அளவிலான தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரும்புராம்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவராக பவானி ராஜீவ் காந்தி
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், மாரியம்மன் கோவில்
தெருவில் உள்ள மக்கள் நீண்ட நாட்களாக இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என
கூறி வந்தனர். இதனை அடுத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் – II
2021-2022 மூலமாக மாரியம்மன் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய்
11,74,000 செலவில் அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த சாலையானது முறையாக அமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.







