புதிய பேருந்து சேவை – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்!

புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் 300 புதிய பேருந்து சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்செயலகத்தில், போக்குவரத்துத்துறை சார்பில் 127 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் 300 புதிய பஸ்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு, 8 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வணிகம், சமூக மற்றும் பிற தேவைகளுக்காக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொதுப்போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்போக்குவரத்து கழகங்களின் 26 மண்டலங்கள் மற்றும் 317 பணிமனைகளின் வாயிலாக இயக்கப்படும் சுமார் 21,527 பஸ்களின் மூலம் தினசரி சுமார் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதில் சுமார் 64 சதவீதம் பேர் மகளிர், மாணவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், விடுதலைப்போராட்ட வீரர்கள், கலைமாமணி விருதாளர்கள், பிற தகுதி வாய்ந்த பயனாளிகள் கட்டணமில்லா பயணச்சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல், முன்பு நிறுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் பஸ் சேவைகளை இயக்குதல், பழைய பஸ்களை மாற்றுதல், பணிமனைகள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், வாகனங்களின் தகுதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப அடிப்படையிலான பயணிகளின் சேவைகளை விரிவுப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 17.06.2026 அன்று நடைபெற்ற போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, போக்குவரத்துத்துறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாசற்ற, நவீன, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, பாதுகாப்பான மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையிலான பொதுப்போக்குவரத்து அமைப்பாக மேம்படுத்த வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான முறையின் மூலம் டிஜிட்டல் கட்டண வசூல், GPS / Vehicle Location Tracking, பயணிகள் தகவல் அமைப்புகள், பஸ் நிலையங்களில் 24×7 பயணிகள் உதவி மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அதன்படி, பொதுப்போக்குவரத்து சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநகர் போக்குவரத்துக்கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு 36 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பஸ்கள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பஸ்களில் 164 டீசல் பேருந்துகளும், BS VI இணக்கமான, குறைந்த மாசு உமிழ்வு கொண்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 CNG பஸ்களும் அடங்கும். இப்புதிய பேருந்துகள் நகர மற்றும் புறநகர் பஸ் சேவைகளை வலுப்படுத்தி, பயணிகளுக்கான தொடர் சேவையை மேம்படுத்தி, பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைத்து, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு வகை செய்யும். இந்த புதிய பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து முனையங்களிலிருந்தும், மாநகர் போக்குவரத்து பஸ்கள் தொடர்புடைய பஸ் நிலையங்களிலிருந்தும் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்கின.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச்செயலாளர் முனைவர் மு. சாய்குமார் இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை செயலாளர் முனைவர் மா.வள்ளலார் இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளர் ஆர். லில்லி இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் த. மோகன் இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.