தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை, ராகுல் காந்தியின் வருகை உறுதிப்படுத்தி இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியைக் காண, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வருகை தந்தது, மதுரைக்காரன் என்ற வகையில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாக அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வருகை தரும் அனைவரையும் தாம் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான், ராகுல் காந்தி பாதுகாப்பாக வந்து செல்ல முடிகிறது என குறிப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, ராகுல்காந்தியின் வருகை தேர்தலை ஒட்டிய அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தால், அது மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.







