கால்பந்தாட்ட ஜாம்பவானான அர்ஜெண்டினாவை சேர்ந்த மறைந்த டியாகோ மரடோனாவுக்கு கொல்கத்தா அல்லது தென்னிந்தியாவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் அறிவித்துள்ளார்.
1986 உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் வெற்றிக்குரிய கோலை போட்டதன் மூலம் அர்ஜெண்டினாவை சாம்பியன் பட்டம் பெற வைத்து ‘கடவுளின் கை’ என புகழப்பட்டவர் அர்ஜெண்டினாவின் மரடோனா. ஜாம்பவனாக விளங்கிய மரடோனா அண்மையில் மறைந்ததையடுத்து உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் இயன்ற வகையில் அவருக்கு சிறப்பு சேர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் கால்பந்தாட்டம் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்து வருகிறது. அந்த வகையில் கேரளாவின் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர், மரடோனாவுக்காக அருங்காட்சிகம் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளார்.
பல ஏக்கர் பரப்பளவில் கொல்கத்தா அல்லது தென்னிந்தியாவில் இந்த அருங்காட்சிகம் அமைக்கப்படும் எனவும் முக்கிய அம்சமாக முழு உருவ தங்க சிற்பத்தில் மரனோடாவுக்கு சிலை நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கேரளா வந்தபோது தங்கத்திலான அவரின் சிலையை மரடோனாவுக்கு பாபி செம்மனூர் பரிசளித்ததாக நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.







