சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம் ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. ஆனால், 8 வழிச்சாலை திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பையும் மீறி, தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், காடுகள் அழிக்கப்படுவதாகவும் கூறி விவசாயிகள், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை, ரத்து செய்தது உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட இயக்குநர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், பல்வேறு கேள்விகளை எழுப்பியது. எதிர்மனுதாரர் மற்றும் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் மீதான தீர்ப்பை, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.இந்த நிலையில் 8 வழிச்சாலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, இன்று வழங்க உள்ளது.







