தொழிலதிபரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் “Truth Social” என்ற புதிய செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலின்போதும் அதிபர் ஜோ பைடனின் வெற்றியை அடுத்தும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியக் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரின் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் உலகிற்கு உண்மையைத் தெரிவிப்பதற்காகத் தானே சொந்தமாக ஒரு செயலியை உருவாக்குவேன் என சவால் விட்டிருந்தார்.
அந்த சவாலுக்கேற்பத் தற்போது தனது சொந்த நிறுவனமான டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி மூலம் “Truth Social” என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார். மேலும் அச்செயலியை இன்று ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்கிறார். இந்த ஆப் மூலம் அமெரிக்காவில் நடக்கும் தவறுகள் மற்றும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவோம் என அவர் தெரிவித்தார். மேலும் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுத்துவது குறித்த தகவல்களை வரும் வாரங்களில் வெளியிடவுள்ளதாக “Truth Social” செயலியின் தலைமை தயாரிப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.









