சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் ஒரு வாரத்திற்கு, விலையின்றி, சூடான சுவையான உணவு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஷெனாய் நகர் அண்ணா சமூக கூடத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், குடிசை வாழ் மக்களுக்கு 800 இடங்களில் இலவச உணவு வழங்கப்படுவதாகக் கூறினார். இதற்காக 300 இடங்களில் உணவு சமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளவர்களுக்கு வீட்டில் சென்று கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அதே வேளையில் அம்மா உணவகங்களும் தடையில்லாமல் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.







