தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நெருங்குவதால் நாளை முதல் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழக கடற்கரையை நெருங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்துக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி, 2 ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் வண்ண எச்சரிக்கை விடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதீத கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







