கொரோனா காலத்திலும் வேலைவாய்ப்பை உருவாக்க தமிழகம் சிறப்பாக செயல்பட்டதாக ஆளுநர் பாராட்டியுள்ளார்.
கொரோனா தொற்று காலத்திலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 60 ஆயிரத்து 674 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர், 15 ஆவது சட்டப்பேரவையின் நிறைவு கூட்டத்தொடர் இது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு அரசு சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
கொரோனா தொற்றை எதிர்கொள்ள பொது சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் தமிழக அரசு செய்த முதலீடுகள் பலன் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திறம்பட வழங்கப்படுவதாகவும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். கொரோனா தொற்று காலத்திலும் கூட ஒரு லட்சத்து 721 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 60 ஆயிரத்து 674 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளதாகவும், ஆளுநர் பன்வாரிலால் குறிப்பிட்டார்.







