உலக புகழ் பெற்ற சுற்றுலாதலமான குமரியில் வட்டகோட்டை வரையிலான கடல் வழி பயணம் செல்லும் சுற்றுலா சொகுசு படகு சவாரியை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார்.
உலக புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இந்தியாவின்
தென்கோடியில் அமைந்துள்ள குமரி முனையில் கடல் நடுவே அமைந்துள்ள
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று
ரசிப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்
குமரிக்கு தினந்தோறும் வருகை தருவார்கள்.
சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுலா படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குமரியில் இருந்து வரலாற்று சின்னமான வட்டகோட்டையை கண்டு ரசிக்க கடல் வழியாக சுற்றுலா படகுகள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் நீண்ட நாட்களாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார்கள். இந்த கோரிக்கையின் அடிப்படையிலும் குமரி சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் வகையிலும் குமரியில் இருந்து வட்டகோட்டைக்கு சுற்றுலா படகுகள் இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி திருவள்ளுவர் மற்றும் தாமிரபரணி என்ற பெயர்களில் சுமார் ரூ.8 கோடி செலவில் அதிநவீன சொகுசு படகுகளை பூம்புகார் கப்பல் கழகம் வாங்கியது. இதனை தொடர்ந்து சொகுசு படகுகளை குமரியில் இருந்து வட்டகோட்டைக்கு கடல் வழி சுற்றுலா சவாரிக்கு இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குளுகுளு வசதிகள் கொண்ட இந்த சுற்றுலா படகில் சவாரி செய்ய ஒரு
நபருக்கு சாதாரண படகில் பயணம் செய்ய 350 ரூபாயும், சிறப்பு படகில் செல்ல 450 ரூபாயும், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு மிக்க சுற்றுலா படகு சேவையை அமைச்சர் எ.வ. வேலு இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த துவக்க நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த சுற்றுலா படகு சவாரி குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெரும் என கருதப்படுகிறது.







