சென்னை தீவுத்திடல் எதிரே உள்ள குடிசை பகுதிகளை அகற்ற முயற்சிக்கும் விவகாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என நினைப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தீவுத்திடல் எதிரே உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்த அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சிப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூவத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ரஞ்சித், குடிசை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற தயாராக உள்ளார்கள் ஆனால் அவர்களுக்கு சென்னை அருகேயே அரசு இடம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் துணை முதல்வர் நினைத்தால் அவர்களுக்கு சென்னையில் இடம் தர முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். குடிசை பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தினால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என மக்கள் கூறுகின்றனர் எனவும் அவர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
எந்த கட்சியினரும் மாவட்ட ஆட்சியரும் கூட இப்பகுதி மக்களை சந்திக்க வரவில்லை எனவும் குடிசை பகுதி மக்களின் உயிரையும்,அவர்களின் உடமைகளையும்
யாரும் பொருட்படுத்தவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.இந்த விவகாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என தாம் நினைப்பதாகவும் மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்கு தான் எனவும் பா.ரஞ்சித் தெரிவித்தார்.







