ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி, மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் கடமையாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
34வது பட்டமளிப்பு விழாவில் 12 ஆயிரத்து 814 பேருக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கவுள்ள நிலையில், ஒமிக்ரான் காரணமாக 129 பேருக்கு மட்டும் நேரடியாக பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவக் கல்வி புரட்சியின் அடையாளமாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் விளங்குகிறது என கூறினார்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்பது மாணவர்களின் கனவாக இருந்தாலும், அவர்கள் பட்டம் பெற்ற பின்பு நாட்டின் கனவாக மாறிவிடுகிறது என குறிப்பிட்டார். நாட்டிற்கு சேவையாற்றும் மாபெரும் மனிதராக மாறியுள்ள மாணவர்களை நாடே வரவேற்கிறது என அவர் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நோய் என்ன? அதன் காரணம் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்பதை நெஞ்சில் நிறுத்தி கடமையாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், கிராமப்புற மருத்துவ சேவை சவாலானதாக மாறி உள்ள இந்த நேரத்தில், மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
விழாவில் சக்திவாய்ந்த முதலமைச்சரே என தமது உரையைத் தொடங்கிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகக் கூறினார்.
ஏழைகளுக்கு எளிதாக மருத்துவம் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத நிலையில், சேவைத்துறை வணிகமயமாகி வருவதாக தெரிவித்தார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மக்களின் நல்வாழ்வு மிக முக்கியமானதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.









