அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 33வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், அதிமுகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழியேற்ற அதிமுகவினர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில், எம்.ஜி.ஆரின் மகுடத்தை எதிரிகள் தட்டிப்பறிக்க விடமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர சபதம் ஏற்பதாகவும் தெரிவித்தனர். முன்னதாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.







