உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொந்த நிலத்தை மோடிக்கு எழுதி தருவதாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 85 வயது மூதாட்டியான பிட்டன் தேவி அந்தப் பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை சந்தித்துள்ளார். தனது பெயரில் இருக்கும் நிலத்தை பிரதமர் மோடி பெயருக்கு மாற்ற வேண்டும் என கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாகவும், அதன்பிறகு தனது மகன்கள் தன்னை கவனித்துக் கொள்ளவில்லை எனவும் மூதாட்டி கூறியுள்ளார். அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகையை பயன்படுத்தி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோடி அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருவதாக மூதாட்டி பாராட்டியுள்ளார். அதனால் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை பிரதமர் மோடி பெயருக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மகன்கள் கைவிட்ட நிலையிலும், அரசு வழங்கும் பணம்தான் தனக்கு உதவியாக இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதனால் மகன்களுக்கு சொத்தில் பங்கு தருவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.







