தன்னை விட வயது அதிகம் உள்ள மாணவியை ஒருதலையாகக் காதலித்த இளைஞர், காதலுக்கு மாணவி சம்மதிக்காத ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தூர்ப்புபள்ளி கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி, சித்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை சிந்தமகுலாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த டெல்லி பாபு என்பவர் ஒருதலையாகக் காதலித்ததோடு தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். காயத்திரிக்கு 20 வயதாகும் நிலையில் டெல்லி பாபுவுக்கு 18 வயதே ஆவதால் அவரது காதலை காயத்திரி நிராகரித்து உள்ளார்.
ஒருகட்டத்தில் காயத்திரியை கடத்திச் சென்ற டெல்லிபாபு அவரை கட்டாயத் திருமணமும் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் காயத்திரியை டெல்லிபாபுவிடம் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த டெல்லிபாபு சித்தூரிலிருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காயத்திரியை வழிமறைத்து கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் காயத்திரியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே காயத்திரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய டெல்லிபாபுவை தேடி வருகின்றனர்.







