முப்படைகளும் உச்சபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை சீனா ஏற்படுத்தி இருப்பதாக முப்டைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- சீனா இடையே கடந்த சில மாதங்களாகவே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. லடாக் எல்லையில் சீனா அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிபின் ராவத், தற்போதைய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்ற சீனா முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகம் உள்ள நிலையிலும், இந்த முயற்சியை சீனா மேற்கொண்டதாக அவர் விமர்சித்தார்.
இதன் காரணமாக, தரைப்படை, கடற்படை, விமானப்படை உச்சபட்ச தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக பிபின் ராவத் குறிப்பிட்டார். இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க இந்திய படைகள் முழு அளவில் தயாராக உள்ளதாகக் கூறிய பிபின் ராவத், நமது படைகள், எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறன் பெற்றவை என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.







