இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ரூ.24,500 கோடி மதிப்பில், புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.4,503 கோடி முதலீட்டில் 27,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சிப்காட் தொழில் பூங்காவில் இடங்களை எளிய முறையில் கண்டறிய புவியியல் தகவல் அமைந்திருப்பதற்கான புதிய இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசின் செயல்பாட்டால் கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். நடப்பாண்டில் மட்டும் ரூ40,000 கோடி மதிப்பில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.







