ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளால் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போர், அமைதி ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் இரு தரப்பினருக்கும் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.
இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபூலில் இன்று காலை பயங்கரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தினர். காபூலின் கோஷல் கான் பகுதியில் அரசு அதிகாரிகள் சென்றபோது நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில் அருகில் இருந்த பொதுமக்கள், வாகனங்கள், கட்டடங்கள், கடைகள் என அனைத்தும் சேதமடைந்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொருப்பேற்கவில்லை.







