விழுப்புரம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை குடும்பத்தினரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலையில் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரசுப்பள்ளி ஆசிரியை வசந்தி. இவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் இரவு உறங்கியுள்ளார். நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்த வசந்தியின் கணவர் சத்யராஜ் கதவை திறந்த போது, உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியையின் கழுத்தில் இருந்த தாலி சரடு உட்பட 50 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். கொள்ளைச் சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதேபகுதியில் சில தினங்களுக்கு முன்பு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.







