இளைஞர் உயிரிழப்பு விவகாரம்: கோட்டாட்சியர் விசாரணை

சென்னையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர், பின்னர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரி. இவரது மூத்த மகன்…

சென்னையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர், பின்னர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரி. இவரது மூத்த மகன் 25 வயதான
ஹரிஷ் கார்பெண்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அபிராமபுரம்
காமராஜர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தனது நண்பர்களுடன் சென்ற ஹரிஷ்
உணவருந்திவிட்டு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் ஓட்டல்
ஊழியர்கள் கொடுத்த தகவலின்படி அபிராமபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ
இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஹரிஷ் உடன் இருந்த அவரது நண்பர்கள் சென்றுவிட ஹரீஷை மட்டும்
காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிறிது நேரத்தில் எழுதி
வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி விட்டதாகவும் வீட்டிற்கு வந்த ஹரிஷ் நள்ளிரவில்
விஷம் அருந்திஉயிரை மாய்த்துக்  கொண்டதாக கூறப்படுகிறது.

பிண கூறாய்வு செய்வதற்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடலை வைத்துள்ள
நிலையில் ஹரிஷின் மரணத்திற்கு அபிராமபுரம் போலீசாரின் துன்புறுத்தலே காரணமென
குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தனது மகன் உயிரை மாய்த்துக்  கொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசாரிடம் கேட்டபோது உயிரிழந்த ஹரிஷ்
நேற்று இரவு ஒரு உணவகத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் தனது
செல்போனை வைத்துக் கொள்ளுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் பிரச்சனை
ஏற்பட்டதாகவும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தது உண்மைதான்
ஆனால் அவரை தாக்கவில்லை எனவும் அவர் போதையில் இருந்ததால் பத்து நிமிடத்தில்
வீட்டிற்கு அனுப்பி விட்டதாகவும் விளக்கமளித்தனர்.

அதே வேளையில் ஹரிஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர் எனவும், இரண்டு முறை போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை
பெற்றவர் எனவும் அபிராமபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து குற்றவியல் நடைமுறை சட்டம் 174-ன் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்
இன்று காலை கிண்டி ஆர்டிஓ யோகஜோதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று
இறந்து போன ஹரீஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அபிராமபுரம்
காவல் நிலையத்திற்கு சென்று அப்போது பணியில் இருந்த காவலர்களிடம் கிண்டி
ஆர்டிஓ யோகஜோதி விசாரணை நடத்தி வருகின்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.