அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ பதிவு வெளியிட்டுள்ள. அந்த பதிவில், “முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரையும், ஜெயலலிதாவை வணங்கி எனதருமை தமிழ்நாட்டு மக்களே.. வாக்குரிமை என்பது நம்முடைய தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தேர்தலில் நாம் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்.
இன்று ஒரேயொரு குடும்பத்தின் அதிகாரப் பசிக்காக அடைக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஐந்தாண்டுகளில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு எங்கேயுமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
உயர்கல்வித்துறையை சீரழிந்து சந்து பொந்துகளில் எல்லாம், கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்று மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய இந்த அராஜக குடும்ப ஆட்சியை அகற்ற உங்களின் வாக்குகள் தேவை; குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர் நிலைகளை மீட்டெடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு, அம்மா உணவகம், அம்மா மினி கிளிக் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அதிமுக அரசு நிறைவேற்றியது. இந்த மக்கள் நலத் திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும், சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம், வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க இருக்கின்றோம். அதுபோல, தமிழ்நாடு இன்னும் முன்னேற்றப் பாதையில் செல்லும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.







