கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருகிறார். சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில், இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட. ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறி வருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் இப்படி செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.