கோவையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, ஒண்டிப்புதூர் என்.ஜி. சாலையைச் சேர்ந்தவர் கணேசன் (28). ஓட்டுநராகப் பணியாற்றி வந்த கணேசன் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கணேசனின் தாயார் கலாமணிக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக கலாமணி வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் அழுகிய நிலையில் கணேசனின் சடலம் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கலாமணி அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார் கணேசனின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டுக்குள் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








