சிலியில் இளம் வயது, இடது சாரி அதிபர்!

லத்தீன் அமெரிக்காவின் சிலி நாட்டு தேர்தலில் 35 வயதான ‘கேப்ரியல் போரிக்’ எனும் இடதுசாரி தலைவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவின் சிலி நாட்டு அதிபர் தேர்தலில், இளம் வயது அதிபராக ‘கேப்ரியல்…

லத்தீன் அமெரிக்காவின் சிலி நாட்டு தேர்தலில் 35 வயதான ‘கேப்ரியல் போரிக்’ எனும் இடதுசாரி தலைவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்காவின் சிலி நாட்டு அதிபர் தேர்தலில், இளம் வயது அதிபராக ‘கேப்ரியல் போரிக்’ வெற்றி பெற்றுள்ளார்.

சிலி நாட்டின் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், இடதுசாரி கொள்கைகளுடடைய ’சமூக ஒருங்கிணைப்பு’ கட்சியின் கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதனால், இவர் சிலி வரலாற்றிலேயே இளம் வயது (35) அதிபரான பெருமையை பெற்றிருக்கிறார்.

கடந்த 2019ல் இருந்து விலை உயர்வு, தனியார்மயம் போன்ற வலதுசாரி கொள்கைகளை எதிர்த்து சிலியில் போராட்டங்கள் வெடித்து வந்த நிலையில், இடதுசாரி கொள்கைகளுடைய முன்னாள் மாணவத் தலைவர் ‘கேப்ரியல் போரிக்’ தற்போது நடந்த தேர்தலில் வென்றது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

சிலியின் முக்கிய அரசியல் பிரமுகராக போரிக் இல்லையென்றாலும், வலதுசாரி கொள்கைகளை பின்பற்றும் அகஸ்டோ பினோசெட்டின் 16 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நாட்டு மக்கள் சந்தித்து வந்த முக்கிய சிக்கல்களை எதிர்த்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில், தனது தேர்தல் பிரச்சார உரையில் இப்பிரச்னைகளை பேசி மக்களின் கவனத்தை ஈர்த்தார். போரிக்கின் இந்த பாணி பிரச்சாரம், ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தோடு ஒப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

சீரான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமத்துவம் கலந்த ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தை சிலியில் அறிமுகப்படுத்துவதே தனது இலக்கு எனவும், ஆட்சிக்கு வந்தால் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து செயல்பட உள்ளதாகவும் போரிக் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது கூடுதல் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

இந்நிலையில், 44 சதவீதம் வாக்குகளுடன் இருந்த குடியரசு கட்சியின் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட்டை, 56 சதவிகித வாக்குகள் பெற்று போரிக் வீழ்த்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தனது வெற்றிக்கு பிறகு போரிக் பேசியதாவது, ‘சிலியில் சர்வாதிகார ஆட்சி முறைக்கு முடிவு கட்டியிருக்கிறோம். ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி இந்த ஆட்சி முறை செயல்படும். பிரசாரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். குறிப்பாக சமத்துவம், பெண்களுக்கான முக்கியத்துவம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முக்கியத்துவம் அளிக்கும்.’

இன்னும் 3 மாதங்களில் இவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் நிலையில், போரிக்கின் இந்த உறுதி சிலி அரசியலில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.