மணிப்பூர் மக்களை கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள்: மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்!

மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவை பாஜகவினர் கொன்றுவிட்டதாக ராகுல்காந்தி ஆவேசமாக தெரிவித்தார்.  மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது.…

மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவை பாஜகவினர் கொன்றுவிட்டதாக ராகுல்காந்தி ஆவேசமாக தெரிவித்தார். 
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து காஙகிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
என் எம்.பி. பதவி நீக்கத்தை ரத்து செய்ததற்கு சபாநாயகருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடந்த முறை பேசும்போது அதானி குறித்து பேசி உங்களுக்கு (சபாநாயகர் ஓம்பிர்லா) நிறைய தொந்தரவு கொடுத்துவிட்டேன். உங்கள் மூத்த தலைவர்களுக்கு அது வலியை ஏற்படுத்தி இருக்கலாம். அந்த வலி உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், நான் உண்மையை பேசினேன். பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் இன்று என் பேச்சைக் கேட்டு பயப்பட வேண்டாம். எனென்றால்  அதானி குறித்து பேசப்போவதில்லை  என ராகுல்காந்தி கூறினார்.
ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கியதுமே தொழிலதிபர் அதானியின் பெயரைக் குறிப்பிட்டதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பாஜகவினரின் முழக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் சற்று நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது.
தொடர்ந்து ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார். மத்திய அரசின் செயல்பாடுகளால் இன்று மணிப்பூர் பிளவுபட்டுவிட்டது. இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை. ஏனென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியாக அவர் மணிப்பூரைக் கருதவில்லை. அவர் மணிப்பூரை கைவிட்டுவிட்டார்.
மணிப்பூருக்கு நான் நேரில் சென்றேன். ஏன் பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை? இலங்கை மன்னன் ராவணன் கூட மக்கள் பேச்சைக் கேட்டார். ஆனால் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள்.
முதலில் மணிப்பூர், பிறகு ஹரியானா என ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஒட்டு மொத்த நாட்டையும் வெறுப்புத் தீயில் எரிக்கப் பார்க்கிறது. நீங்கள் பாதுகாவலர்கள் இல்லை. கொலைகாரர்கள். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முதலில் நான் அச்சப்பட்டேன். ஆனால், இந்த நடைப்பயணத்தின்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இந்திய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை நடைப்பயணம் கொடுத்தது. குமரி முதல் இமயம் வரையிலான எனது ஒற்றுமை நடைப்பயணம் நிறைவுபெறவில்லை. மீண்டும் தொடங்கும் பாஜக ஆட்சி நடக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நான் அவதூறுக்கும் சிறுமைப்படுத்துதலுக்கும் ஆளாகி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் நான் சிறைக்குச் செல்லத் தயார். மேகநாத் மற்றும் கும்பகர்ணன் ஆகிய 2 பேரின் பேச்சை தான் ராவணன் கேட்பான்; ஆனால் பிரதமர் நரேந்திர  மோடியோ அமித்ஷா மற்றும் அதானி சொல்வதைத் தான் கேட்கிறார்.
இவ்வாறு என ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தி உரையாற்றும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.