ஊழலை பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ராகுல்காந்திக்கு பதில் அளித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். பெரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக்கிடையே அவர் உரையாற்றினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் காந்தி, ”இந்திய நாட்டின் ஒரு பகுதியாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார். இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை. ஏனென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியாக அவர் மணிப்பூரைக் கருதவில்லை என்பதே.
மணிப்பூரை பிரதமர் மோடி கைவிட்டுவிட்டார். மணிப்பூருக்கு நானே சென்றேன். ஏன் பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள் என உணர்ச்சிப்பூர்வமாக ராகுல் காந்தி உரையாற்றினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அமைச்சர்களின் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பினர். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மோடி.. மோடி.. என கோஷம் எழுப்ப, மறுபக்கம் ராகுல்.. ராகுல்.. என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
அவரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார். அவர் பேசுகையில், ”காங்கிரஸ் இந்தியாவை விட்டே வெளியேற வேண்டும். இந்தியாவுக்கு ஊழலை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். இந்தியா எப்போதும் திறமையைத்தான் நம்புகிறது. குடும்ப வாரிசு முறையை அல்ல என்று கூறினார்.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சுட்டிக்காட்டி பேசிய ஸ்மிருதி இராணி, அவர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது மக்களுக்கு மிகப்பெரிய கொடூரம் இழைக்கப்பட்டது. மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இப்போதும் உள்ளதே தவிர பிளவுபடவில்லை என்றும் அவர் கூறினார்.







