ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா? நடிகர் சோனு சூட் விளக்கம்

வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித் துறை தெரிவித்ததை அடுத்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சோனு சூட் . பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து…

வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித் துறை தெரிவித்ததை அடுத்து அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சோனு சூட் .

பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் கொரோனா பரவல் காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவினார். வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கவும் உதவி செய்தார்.

இதன் மூலம் இந்தியா முழுவதும் அவரை மக்கள் பாராட்டினர். அவர்தான் நிஜ ஹீரோ என்று சமூக வலைதளங்கள் வர்ணித்தன. இதற்கிடையே தெலங்கானாவில் அவருக்கு சிலையும் வைக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ உதவிகள் மற்றும் பொருளாதார சூழலால் கல்வி கற்க முடியாத மாணவ, மாணவியர்களுக்கும் உதவி வரும் நடிகர் சோனு சூட் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோனு சூட் மற்றும் அவர் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் 20 கோடி ரூபாய் வரை அவர் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, அவர் பெயரைக் குறிப்பிடாமல் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த சோதனை குறித்து நடிகர் சோனு சூட், ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் எப்போதும் உங்கள் தரப்பு கதையை சொல்ல வேண்டியதில்லை. காலம் அதை சொல்லும். நான் வலிமையுடனும் திறந்த மனதுடனும் மக்களுக்காக சேவை செய்ய என்னை அர்ப்பணித்துள்ளேன். என் அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றவும் தேவையானவர் களுக்கு உதவுவதற்காகவுமே காத்திருக்கிறது.  கடந்த 4 நாட்களாக சில விருந்தினர்களை சந்திப்பதில் பிசியாக இருந்ததால், உங்கள் சேவைக்காக வர இயலவில்லை. இப்போது  மீண்டும் வந்துவிட்டேன். என் பயணம் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.