28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கர்ஜித்த சிஎஸ்கே…!!


நாகராஜன்

கட்டுரையாளர்

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஆக்ஷன் நடந்து முடிந்த பின்னர் இறுதிக் கட்ட அணிகள் மற்றும் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டன. முதல், சென்னை அணி நடப்பாண்டில் டாப் 4 இடத்திற்கு தகுதி பெறாது என பலராலும் வைக்கபட்ட கருத்து விமர்சனங்கள் அனைத்தும் தற்போது தவிடு பொடியாக்கியுள்ளது சூப்பர் கிங்ஸ் CREW. அதே சமையம் இந்த ஆண்டுடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறப்போவதாக பரவிய தகவலால், கோப்பையை வென்று, வெற்றிமுகத்துடன் தோனி விடைபெற வேண்டும் என சென்னை ரசிகர்களின் மத்தியிலும் எதிர்பார்ப்பை கூட்டச் செய்தது.

அதே கனவுடன் தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், 2022-ன் சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியபோது, முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட்டின் ருத்ர தாண்டவம் எதிரணியின் பவுலிங் ஸ்குவார்டுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இருப்பினும் போட்டியின் முடிவு சிஎஸ்கே-வுக்கு எதிராக அமைந்தது. துவண்டு போன சென்னை அணியை, அன்புடன்’இல் ஆறத்தழுவி வரவேற்றனர் சென்னை ரசிகர்கள். மேலும் 3 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே போட்டிகளை சொந்த மண்ணில் பார்க்க ஆவலாக காத்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் ருதுராஜுடன் கைகோர்த்த டெவன் கான்வே பவர்பிளே ஓவர்களில் லக்னோ அணியை தெறிக்கவிட, 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே… அதே கொதிப்புடன் மும்பை விஜயம் செய்த சிஎஸ்கே, வான்கடே மைதானத்திலேயே, மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. வெற்றி களிப்போடு சென்னைக்கு திரும்பிய சிஎஸ்கே-வுக்கு, சஞ்சு சாம்சனின் சைலெண்ட் கில்லர் ஒரு சர்ப்ரைஸ் தோல்வியை கொடுத்தது மட்டுமல்லாமல், நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ், தீபக் சகாரின் தொடர் காயங்கள் சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது.

பல குழப்பங்களுடன் கிங் கோலியின் ராஜாங்கமான பெங்களூருக்கு புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள், சின்னசாமி மைதானத்தின் நாலா பக்கங்களையும் பவுண்டரிகளால் பதம் பார்த்தனர். அந்த போட்டியின் கடைசி ஓவர் வரை கியூரியாசிட்டிக்கு பஞ்சமில்லாமல் வைத்திருந்த மேக்ஸ்வெல், டூ பிளசி ஜோடி ஒரு கட்டத்தில் தோல்வியின் பிடியில் மாட்ட, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மஞ்சள் படை. வெற்றி முகத்துடன் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா சென்ற மஞ்சள் படை, 235 ரன்கள் குவித்து, இந்த ஐபிஎல் தொடரிலேயே ஒரு அணியின் அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது.

அடுத்ததாக ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுடன் தோல்வி, லக்னோ அணியுடனான போட்டி மழையால் ரத்து என பல சோதனைகளை கொடுத்தாலும், மும்பை இந்தியன்ஸை சந்தித்த சிஎஸ்கே, 13 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அந்த அணியை வென்று அசத்தியது. அடுத்ததாக டெல்லியை வீழ்த்திய சென்னை அணியின் பிளே ஆஃப் போட்டிக்கு செக் மேட் வைத்தது கொல்கத்தா.

எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கி தோல்வியை சந்தித்ததை அடுத்து, டெல்லிக்கு எதிரான கடைசி லீக் போட்டியை வாழ்வா, சாவா ஆட்டமாக எதிர்கொண்டது சிஎஸ்கே. ருதுராஜ் மற்றும் கான்வே ஜோடி டெல்லியில், சென்னையின் ஆதிக்கத்தை அடிக்கல் நாட்ட 223 ரன்கள் சேர்த்த பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி அணி. கேப்டன் டேவிட் வார்னர், சிஎஸ்கே-வின் பிளே ஆqப் கனவை தனது அதிரடியால் சிதறடித்தாலும், மற்றொரு புறம் டெல்லியின் நம்பிக்கை விக்கெட்டுகளை வசியப்படுத்திய தீபக் சஹர், மஹீசா தீக்‌ஷனா மற்றும் பத்திரானா ஆகியோர் டெல்லியின் ஓட்டத்தை 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, 12 ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்னை அணி நுழைய வழிவகுத்தனர்.

உட்சபட்ச வரவேற்புக்கு மத்தியிலான குவாலிஃபயர் 1 போட்டியை சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனான குஜராத்துக்கு எதிராக களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ், மகேந்திர சிங் தோனியின் துள்ளியமான கேப்டன்சி திறனால் அந்த போட்டியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குஜராத் அணியை சென்னையில் முதல் முறையாக எதிர்கொண்ட சிஎஸ்கே-வுக்கு சிறந்த ஒரு வெற்றியை பதிவு செய்து கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பின்னர்கள் மற்றும் தோனியின் செல்லப்பிள்ளையான மதீஷா பாத்திரானா ஆகியோர், தங்கள் பங்களிப்பால் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றனர்.

மே 28, இறுதிப் போட்டிக்கான களம் எரிமலை குழம்பாக கொழுத்தி எரிந்துக் கொண்டிருக்கும் அதே நேரம், அந்த தீயை ஒட்டுமொத்தமாக தகனமாக்கி தனிய செய்தது பெருமழை. இறுதிப் போட்டியை காண வந்த ரசிகர்கள் மழை இப்போது நிற்கும், அப்போது நிற்கும் என வானம் பார்க்க, வாய்ப்பில்ல ராஜா என அடித்துச் சொன்னது மழை.

மைதானத்தில் ஏரி போல தேங்கி இருந்த நீரை வெளியேற்ற நிச்சயம் ஒரு மணி நேரமாவது ஆகும் என்பதால் இரவு 11 மணியாகியும் மழை விடாத சூழலில், மே 29 இரவு 7.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது ஐபிஎல் இறுதிப் போட்டி. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

மறுநாள் விடிந்தது, முந்தைய தினம் மழை பெய்ததற்கான அறிகுறியே இல்லாதது போல வெயில் மழைக்கான தடையங்களை அழித்துவிட்டது. மாலை நேரம் நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் இன்றும் மழை பெய்துவிடுமா என்ற பயமும், இறுதிப் போட்டியை காண காத்திருக்கும் ஏக்கமும் தொடர்ந்து கொண்டிருந்தது.

போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு என்னவோ டார்கெட்டாக சுப்மன் கில் மட்டுமே இருந்திருப்பார். ஆனால் சென்னை அணியின் பந்துவீச்சை குஜராத் அணியின் விரித்திமான் சாஹா மற்றும் சாய் சுதர்சன் நாலா பக்கமும் சிதற விட, அஹமதாபாத்தில் குஜராத்தின் வெற்றிக் குரலே ஓங்கி ஒலித்தது.

20 ஓவர்களில் 214 ரன்கள் விளாசிய குஜராத் அணி சென்னை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்ததை அடுத்து, மஞ்சள் படையின் கடைசி யுத்தத்தில் குதித்தது டெவன் கான்வே, ருதுராஜ் ஜோடி. 3 பந்துகள் மட்டுமே விளையாடிய சென்னை அணிக்கு, குஜராத்தின் இலக்கை விட கடினமான மனநிலையை கொடுத்தது மழை. ஆம், அஹமதாபாத் மைதானத்தை மீண்டும் மழை சூழ, 2 மணி நேர காத்திருப்பு சென்னை அணிக்கு அவசியமானது.

அதன் பின் டக்வர்த் லூயிஸ் அடிப்படையில் 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட, மீண்டும் ஒரு இமாலய இலக்கை களம் காண புறப்பட்ட கான்வே, ருதுராஜ் ஜோடி, குஜராத் பந்துவீச்சை அட்டாக்கிங் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இருப்பினும் சென்னை அணி அடிக்கடி விக்கெட்டுகள் இழக்க, தொடர்ந்து வெற்றிக்கான அழுத்தம் மேலும் மேலும் கூடியது. டெவன் கான்வே 47 ரன்களில் அவுட் ஆக, ரஹானே, அம்பாத்தி ராயுடு என ஒவ்வொருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக, தோனியை நம்பி இருந்த சென்னை ரசிகர்கள் அவரது டக் அவுட்டால் மனமுடைந்து போனார்கள்.

சென்னை அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ரவீந்திர ஜடேஜா, தூபே ஜோடி மட்டுமே இறுதிப் போட்டியை எதிர்கொண்டது. வழக்கத்திற்கு மாறாமல் ஒவ்வொருவரின் இதயமும் நொடிக்கு நூறு முறை துடிக்க, 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா ஸ்டிரைக்கில் இருக்க, மோஹித் சர்மா வீசிய ஒரு பந்தை சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டதை அடுத்து, கேமரா முழுக்க தோனியை நோக்கி படையெடுக்க, கேப்டன் கூல், கூலாக சிந்தித்து கொண்டிருந்த தருணம் அது.

கமெண்டரி பாக்ஸில் இருந்து 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை அணி என்ற குரல் ஓங்கி ஒலிக்க, ஸ்கிரீனில் தென்பட்டது என்னவோ டீப் ஸ்குயர் லெக் திசையில் ஒரு பவுண்டரி மட்டுமே. ஆரவாரத்தில் ஓடி வந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவை கொண்டாட, அவர் மட்டும் பெவிலியனை நோக்கி இடைவிடாது ஓடி சென்று தனது கேப்டன் எம்.எஸ்.தோனியை ஆரத்தழுவி கட்டியணைத்தார்.

ஆம், 4 முறை அணியினருக்காக கோப்பை வாங்கி கொடுத்த தோனிக்கு, ஒரு முறையாவது சென்னை அணியினர் கோப்பையை வாங்கி கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் கண்களில் கண்ணீராக வழிந்த அந்த தருணம். ஆனால் இப்போது 5வது சாம்பியன் பட்டம் வென்ற சந்தோஷத்துடன் அவை அனைத்தும் ஆனந்த கண்ணீராய் பெருக்கெடுத்தது அனைவரின் கண்களிலும்….

மும்பை இந்தியன்ஸ் அணியின் 5 முறை சாம்பியன் என்ற சாதனையை சமன் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பது மட்டுமால்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி ஒருவேளை தோனி ஓய்வு பெற நினைத்தால், 2011 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு தோனி எப்படி ஒரு உலகக் கோப்பையை பரிசளித்தாரோ, அதே போல சென்னை அணியினர், இந்த ஐபிஎல் கோப்பையை தோனிக்காக பரிசளித்துள்ளனர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

– நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading