தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏலகிரியில் தனியார் தங்கும் விடுதிகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரிக்கு எப்போதும் தனிச்சிறப்புண்டு. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.இங்கு பயணிகளின் வசதிக்கென்று இருநூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.மேலும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வசிக்கும் உள்ளூர் வாசிகளின் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வருகிறது.இந்நிலையில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியை சேர்ந்த காளியம்மாள் என்ற விவசாயி தனது 8ஏக்கர் விவசாய நிலத்தை அரசு பழத்தோட்டம் அமைப்பதற்காக வழங்கினார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பழத்தோட்டம் பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில் தனியார் தங்கும் விடுதிகள் தங்களது குப்பைகளை இத்தோட்டத்தில் கொட்டி வருகின்றனர். மேலும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வெளியேற்றும் கழிவுகளையும் இங்கேயே கொட்டுகின்றனர்.இதனால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் இப்பகுதியில்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது குறிப்பிடதக்கதாகும்.இப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளுடன் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரும் சேர்ந்து கலப்பதால் இப்பகுதி ஊற்றுநீர் மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. மேலும் நீர் வீழ்ச்சிக்கு செல்லும் நீரும் குப்பை கழிவுகளால் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
—வேந்தன்







