சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்காக இரவே வந்த நபர்களை அனுமதி மறுத்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ்
ஐதராபாத் அணிகள் வரும் 21ம் தேதி மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் அல்லது மைதானத்தில் நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு பகுதியாக வருகிற 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம்
மைதானத்தில் உள்ள கவுன்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாலையில் கூட்டம் அதிகமாக வந்து விடுவதால்
இரவு நேரமே வந்து காத்திருந்து டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கி செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு படையெடுத்தனர்.
எனவே போலீசார் இரவு நேரங்களில் இங்கே யாரும் வருவதற்கு அனுமதி இல்லை என்று மறுத்து அவர்களை திருப்பி அனுப்பினர். இருந்த போதும் ஆங்காங்கே இளைஞர்கள் நின்ற
நிலையில் போலீசார் அவர்களை வீட்டிற்கு செல்லும்படி வலியுறுத்தினர். இன்று காலை ஆறு மணிக்கு மேல் வரிசையில் நிற்பதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதுவரை
யாரும் இப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டிக்கெட்கள் விற்பனை நடைபெறும் இரு நுழைவாயிலிலும் போலீசார் தடுப்பு வேலிகளை
அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அனைவரையும் கலைந்து செல்லும்படியும் வற்புறுத்தி வருகின்றனர்.







