பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது புதிய அறிவிப்புகளை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்.
கூடுதல் பெண் குழந்தைகள் பயனடைய முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவினத்தில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : பணிந்தது ஆர்சிபி; 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே த்ரில் வெற்றி!
25 கோடியே 70 லட்ச ரூபாய் செலவினத்தில், 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர் கீதாஜீவன், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியினை கண்காணித்து நிகழ் பதிவு மேற்கொள்ள ஏதுவாக 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 17 கோடியே 53 லட்ச ரூபாய் செலவினத்தில் திறன் கைபேசிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.







