ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு!!

கடும் உழைப்பால் கிடைத்த பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்…

கடும் உழைப்பால் கிடைத்த பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, கடந்த 27 ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்ற நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தலைமையில், ஜன்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட, வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த கைது நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து,டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா, கடந்த 38 நாட்களாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்துகொடுத்தோம் . மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் சட்டத்தை மீறியதால் கைது செய்து விடுவிக்கப்பட்டார்கள். தற்போது அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் போராட்டத்திற்கு விண்ணப்பித்தால் ஜந்தர் மந்தருக்கு பதிலாக வேறு இடத்தில் அனுமதி வழங்கப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி பேரணி செல்ல முற்பட்ட விவகாரத்தில், போராட்டத்தை முன்னெடுத்து சென்ற முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக் , வினேஷ் போகட் மற்றும் போராட்டத்தின் மற்ற அமைப்பாளர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு சாக்ஷி மாலிக் , வினேஷ் போகட் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நாட்டிற்காக போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக, சாக்சி மாலிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிடுவோம். எங்கள் கழுத்துக்களை அலங்கரிக்கும் பதக்கங்களுக்கு இனிமேலும் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன் உள்ளது என கூறி உள்ளார்.

அதேபோல் பஜ்ரங் புனியா கூறுகையில், இனி எங்களுக்கு பதக்கங்கள் தேவையில்லை. கடும் உழைப்பால் கிடைத்த பதக்கங்களை புனித நதியான கங்கையில் வீசுவோம். துன்புறுத்தல்களுக்கு எதிராக பேசினால் சிறையில் அடைக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மல்யுத்த வீரர்களின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.