இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.
தெலங்கானாவில் அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 125 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட வெண்கல சிலை இன்று பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. ஐதராபாத்தில் தெலங்கானா மாநில புதிய தலைமைச் செயலகத்தின் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பில் 125 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைதான் உலகிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலையாகும்.
தெலங்கானா அரசின் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறை சார்பில் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் செலவில் எஸ்சி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஒன்பது டன் எடையுள்ள வெண்கலத் தோலுடன், 45 அடி அகலத்தில் சிலை அமைந்துள்ளது சிலையின் சட்டகம் 155 டன் துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்பட்டது.
சிலையின் அடிவாரத்தில் நாடாளுமன்ற வடிவத்தில் கட்டட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் புகைப்படத் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்தநாளான 2016ம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி இச்சிலையை நிறுவ தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடிக்கல் நாட்டினார்.
“I like the Religion that teaches Liberty, Equality and Fraternity”
On his birth anniversary, Respects to Bharat Ratna Dr. B.R. Ambedkar Ji 🙏
Delighted that Telangana CM KCR Garu will be unveiling world’s largest statue of the visionary leader pic.twitter.com/HvVm51nYRX
— KTR (@KTRBRS) April 14, 2023
கட்டுமானப் பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளான இன்று பிற்பகல் 2 மணிக்கு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சிலையைத் திறந்து வைக்கிறார். சிலை திறப்பு விழாவில் அண்ணல் அம்பேத்கரின் பேரனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தெலங்கானாவின் 119 தொகுதிகளிலும் இருந்தும் பொது மக்கள் சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வசதியாக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.







