உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலகிலேயே மிகப்பெரிய தானியக் கிடங்கை ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 700 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதையும் படியுங்கள் : “முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
இதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்புக் கிடங்கை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.







