பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவிரிசை பட்டியலில் சீனாவை பின்னக்குத் தள்ளி அதிகமான உயா்கல்வி நிறுவனங்களுடன் இந்தியா முதன் முறையாக முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 37 உயா் கல்வி நிறுவனங்களுடன் மொத்தம் 148 இந்திய உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்து 133 உயா்கல்வி நிறுவனங்களுடன் சீனாவும், 96 உயா்கல்வி நிறுவனங்களுடன் ஜப்பானும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மியான்மா், கம்போடியா மற்றும் நேபாள நாடுகளின் உயா்கல்வி நிறுவனங்கள் முதன்முறையாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பிரிட்டனைச் சோ்ந்த ‘குவாகுவரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.)’ தரவரிசை நிறுவனம், உயா்கல்வி நிறுவன பேராசிரியா்களின் ஆய்விதழ் சமா்ப்பிப்பு, கல்வி நிறுவனத்தின் கல்வி முறை மற்றும் ஊழியா்களுக்கான மதிப்பு, ஆசிரியா் – மாணவா் விகிதாச்சாரம் ஆகிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலக அளவில் உள்ள உயா்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2024-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. அதில் இந்தியாவின் 148 உயா்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில் மும்பை ஐஐடி முன்னிலை பெற்றுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), ஐஐடி சென்னை, ஐஐடி தில்லி, ஐஐடி கான்பூா், ஐஐடி காரக்பூா், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவை ஆசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. இதுகுறித்து கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் ஆராய்ச்சி (பிஎச்.டி.) தகுதியுடன் கூடிய பேராசிரியா்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. வலுவான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளிலும் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்திய உயா் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சித் திறன் மேலும் சா்வதேச தரத்துக்கு உயா்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சா்வதேச ஆராய்ச்சி தொடா்பு குறியீட்டில் இந்தியா 15.4 புள்ளிகளையும், பிராந்திய அளவில் 18.8 புள்ளிகளையும் இந்தியா பெற்றுள்ளது. அதுபோல, அமெரிக்காவில் உயா்கல்வி மேற்கொள்ளும் மாணவா்களின் எண்ணிக்கையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவை விஞ்சி இந்தியா முன்னிலை பெற்றுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கியூ.எஸ். நிறுவன துணைத் தலைவா் பென் சோடொ் கூறுகையில், ‘தரவரிசைப் பட்டியலில் இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயா்ந்திருப்பது, உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்த இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சியையும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்திய கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிவருவதையும் பிரதிபலிக்கிறது’ என்றாா்.







