உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
லண்டன் தி ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஸ்.எஸ்.பரத், அஜிங்க்ய ரஹானே, ரவீந்தர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பாட் கம்மின்ஸ் தலைமையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், நேதன் யலன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், ஆகியோர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளனர்.
டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பவுலிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னரும், உஸ்மன் கவாஜாவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். இதில் 10 பந்துகளை மட்டுமே சந்தித்த கவாஜா ரன் ஏதும் எடுக்காத நிலையில், முகமத் சிராஜ் பந்தை அடிக்க முற்பட்ட போது கேஸ்.எஸ்.பரத்திடம் கேச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து நிதானமாக ஆடி வந்த வார்னர் 8 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தபோது ஷர்துல் தாகுர் பந்தில் கேஸ்.எஸ்.பரத்திடம் கேச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்ததாக மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் நடையை கட்டினார். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித்தும், டிராவிஸ் ஹெட்டும் வலிமையான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.
ஒரு பக்கம் டிராவிஸ் ஹெட் அடித்து விளையாட மற்றொரு புறம் ஸ்மித் நிதானமாக விளையாடினார். டிராவிஸ் ஹெட் மட்டும் 156 பந்துகளில் 146 ரன்களை குவித்தார். இதில் 22 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். ஸ்மித் 227 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகளுடன் 95 ரன்களை எட்டினார். இவர்கள் இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 327 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.