உலகை கலக்கிய இந்திய பாடல்கள்

ஆஸ்கர் அரங்கில் மீண்டும் ஒரு முறை இந்திய இசை கவுரவிக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் துள்ளல் இசையில் வெளியான ”ஜெய் ஹோ” பாடலை தொடர்ந்து  கீரவாணியின் அதிரடி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த…

ஆஸ்கர் அரங்கில் மீண்டும் ஒரு முறை இந்திய இசை கவுரவிக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் துள்ளல் இசையில் வெளியான ”ஜெய் ஹோ” பாடலை தொடர்ந்து  கீரவாணியின் அதிரடி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோசும் இணைந்து ஆஸ்கர் மேடை ஏறி விருதைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் உலக அளவில் புகழ்பெற்ற இந்திய பாடல்கள் சிலவற்றை பார்ப்போம்.

ஆவாரா ஹூன்

1951ம் ஆண்டு ராஜ்கபூர் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் ஆவாரா. சோவியத் யூனியனிலும், சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் வசூலில் சக்கைபோடுபோட்ட இந்த படத்தில் இடம்பெற்ற ஆவாரா ஹூன்  பாடல் ரஷ்யா உள்ளிட்ட சோவியத்யூனியன் நாடுகளிலும், சீனாவிலும் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்தி நடிகர் ராஜ்கபூரை சோவியத் யூனியனில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு புகழ்பெறச் செய்ததில் இந்த பாடலுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஷங்கர்- ஜெய்கிஷன் இசையமைத்த இந்த பாடலை முகேஸ் பாடியிருந்தார். பாடலாசிரியர் சைலேந்திரா எழுதிய இந்த பாடலை முன்னாள் ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ஸ்டின்,  ரஷ்ய தலைவர் மாஸ்கோவின் சக்திவாய்ந்த மேயராக இருந்த லுஷ்கோவ் உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி முனுமுனுப்பதுண்டாம். ரஷ்யா, சீனா, கிரீஸ், துருக்கி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளூர் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் அளவிற்கு அந்த நாடுகளில் இந்த பாடல் புகழ்பெற்றிருந்தது.

ஐ எம் ஏ டிஸ்கோ டான்சர்

பாப்பர் சுபாஷ் இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளிவந்த படம் டிஸ்கோ டான்சர். மிதுன்சக்ரவர்த்தி கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், கிம் கதாநாயகியாக நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் ராஜேஸ் கண்ணா நடித்திருந்தார். இந்தியாவில் மெகாஹிட் அடித்த இந்த படம் ரஷ்யாவிலும், சீனாவிலும் பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற ஐ எம் ஏ டிஸ்கோ டான்சர் பாடலும், அதில் இடம்பெற்ற மிதுன் சக்ரவர்த்தியின் நடனமும் சோவியத் யூனியனிலும், சீனாவிலும் மொழி பேதங்களை கடந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. 80களில் சோவியத் யூனியனில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் ஐ எம் எ டிஸ்கோ டான்சர் பாட்டு பட்டைய கிளப்பியது. அப்போது சோவியத் யூனியன் தலைவராக இருந்த மிக்கேல் கார்ப்பசேவ் இந்தியா வந்தபோது மிதுன் சக்ரவர்த்தி தனது மகளுக்கு மிகவும் பிடித்த நடிகர் என குறிப்பிட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. அமெரிக்காவின் பிரபல ராக் இசைக் குழுவான தேவோ இசைக்குழுவையும் இந்த பாட்டு வெகுவாக கவர்ந்தது. அதன் எதிரொலியாக டிஸ்கோ டான்சர் என்கிற பெயரில் 1988ம் ஆண்டு அவர்கள் ஒரு பாடலை வெளிட்டார்களாம். இந்தி திரையுலகில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர் பப்பி லஹரி டிஸ்கோ டான்சர் படத்திற்கு  இசை அமைத்திருந்தார்.

ஜெய் ஹோ

டேனி பேயல் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான ஆங்கில படமான ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய்ஹோ பாடலும் உலகை ஒரு கலக்கு கலக்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த பாடல் கிராமி அவார்டு உள்ளிட்ட கவுரவங்களை பெற்றபோதே ஆஸ்கர் அவார்டை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே 2009ம் ஆண்டு நடைபெற்ற 81வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஜெய் ஹோ சிறந்த பாடலுக்கான விருதை பெற்றது. பாடலை எழுதிய குல்ஷரும், பாடலுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து இந்த விருதினைப் பெற்றுக்கொண்டனர். மேலும் ஸ்லம் டாக் மில்லினேர் படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெற்று இரட்டை ஆஸ்கார் விருதினை கையில் ஏந்தி இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தார் தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான்.

ராக்கம்மா கையத்தட்டு

ரஜினிகாந்த் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் 1991ம் ஆண்டு வெளிவந்த தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடலும் மொழி எல்லைகளை கடந்து வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் புகழ்பெற்று திகழ்ந்தது. கடந்த 2002ம் ஆண்டு பிபிசி உலகசேவை நிறுவனம் பாடல்களுக்கிடையே உள்ள பாப்புலாரிட்டியை அடிப்படையாக வைத்து. சர்வதேச அளவில் ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. 122 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. இதில் ஒரு கட்டத்தில் யெஸ்டர்டே, போகேமியான், ராப்சோடி,  ஸ்டெய்ர்வே டு ஹெவன் உள்ளிட்ட சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆங்கில பாடல்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது ராக்கம்மா கையத்தட்டு பாடல். 2002 டிசம்பர் 21ந்தேதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது 4 இடத்தை  பிடித்தது ராக்கம்மா கையத்தட்டு. 500 படத்திற்கு இசையமைத்த பிறகும் இளையராஜாவின் இசை எவ்வளவு புதுமையாக இருக்கிறது என 1991ம்ஆண்டு தளபதி படம் வெளிவந்தபோது அந்த படத்தின் இசை குறித்து வியந்தார் இயக்குநர் மணிரத்னம். அதற்கேற்ப  தளபதி படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு திகட்டாத இசைவிருந்தாக அமைந்தன.

வொய் திஸ் கொல வெறி டி

இணையத்தில் வைரல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிய விஷயங்களில் இந்த பாடலும் ஒன்று. அனிருத் இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் யூடியூப்பில் முதல் முறையாக 10 கோடி பார்வைகளை கடந்த முதல் இந்திய பாடல் என்கிற பெருமையை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் இடம்பெற்றிருந்த  வொய் திஸ் கொல வெறி டி பாடலின் பாப்புலாரிட்டி குறித்து டைம் இதழிலும்கூட எழுதப்பட்டது. பிபிசியும் அதனைப் பற்றி பேசியது. அமெரிக்கா, துருக்கி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த பாட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் இரவு விடுதிகளை களைகட்ட வைத்தது வொய் திஸ் கொல வெறி டி  பாடல்ஒரே இரவில் இந்த பாடல் மூலம் தனுசும், அனிருத்தும் உலக புகழை அடைந்தனர்.

துனக் துனக் டுன்

பிரபல இந்தி பாடகர் தலேர் மெகந்தியின் இந்த சூப்பர் ஹிட் பாட்டு இந்திய ரசிகர்களை மட்டுமல்ல சர்வதேச ரசிகர்களையும் தாளம்போட வைத்தது. வெற்றிக்கொண்டாட்டங்கள் என்றால் அதில் உற்சாகத்தை பகிர்ந்துகொள்ள இந்த பாட்டுக்கு நிச்சயம் பங்கு உண்டு. இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த பஞ்சாபி பாடல் ஒரு கலக்கு கலக்கியது.  இந்த பாட்டுக்கு இருக்கும் புகழை பார்த்து வியந்த பிஸார்ட் எண்டர்டெய்ன்மெண்ட் என்கிற பிரபல வீடியோ கேம் நிறுவனம். துனக் துனக் டுன் பாடலை தனது வீடியோ கேமிலும் இணைத்துக்கொண்டது.

ஒருவன் ஒருவன் முதலாளி

1996ம் ஆண்டு ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த முத்து படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும்  பெரும் வெற்றி பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஜப்பானிலும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக ஒருவன் ஒருவன் முதலாளி, தில்லானா தில்லானா பாடல்கள் ஜப்பான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. டான்சிங் மகாராஜா என ரஜினியை ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடினர். முத்து படம் ஏற்படுத்திய தாக்கத்தில் தமிழ் கற்றுக்கொண்ட ஜப்பான் ரசிகர்கள் ஏராளம். ரஜினி படம் ரிலீசானால் தமிழ்நாட்டிற்கு வந்து படம் பார்க்கும் அளவிற்கு ஜப்பானில் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் உருவாகினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.