எம்ஜிஆருக்கான பாடல்களில் தனியிடம் பிடித்த பாடல் சிலவற்றில், “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்ற பாடலும் உண்டு…. இது வாலியின் வரிகளாக இருக்கும் என எண்ணிய எம்ஜிஆர், கவிஞரின் பேரைக் கேட்டு பாராட்டினார். யார் அந்த கவிஞர்?
பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர் என கருதப்படுகின்ற மற்றொரு கவிஞர், பூவை.செங்குட்டுவன், கந்தன் கருணை திரைப்படத்தில் வரும் “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பாடலை யாராவது மறக்க முடியுமா?.. மேடையில் பாடப்பட்ட பாடலை கேட்டு சொக்கிப்போன கவியரசர் கண்ணதாசன், அந்தப்பாடலையே திரைப்படத்தில் மெட்டு மாறாமல் வைத்துக்கொள்ளலாம் என கூற… திரைப்படத்தில் இடம்பெற்றது தான், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடல்.

கவுரி கல்யாணம் என்ற திரைப்படத்தில், திருப்புகழைப் பாடப் பாட வாய்மணக்கும்.எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் என்ற பாடலில் பக்தி ரசம் சொட்டும். அகத்தியர் திரைப்படத்தில் இடம்பெற்ற தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற பாடலில் அவ்வைப் பிராட்டியின் கருத்தான அன்னை தந்தையே அன்பின் எல்லை என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும்….
பக்தியில் மணத்த கவிஞர் பூவை செங்குட்டுவன், முத்தமிழில் பாட வந்தேன், முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே என தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் புகழ் மணக்க எழுதிய பாடல் ஒலிக்காத கோயில்களே இல்லை என கூறலாம்.

எம்ஜிஆர் நடித்த “புதியபூமி’ படத்தில் இடம்பெற்ற நான் உங்கள் வீட்டுப்பிள்ளை என்ற பாடலை எழுதியது வாலி என்றும் கண்ணதாசன் என்றும் நம்மில் சிலர் நினைத்திருக்கலாம். வரிகளை படித்துப் பார்த்த எம்ஜிஆர்., வாலியின் பாடல் என எண்ணிக் கொள்ள, பல்லவியை நிர்வாகி ஒருவர் எடுத்துச் சென்று பூவை செங்குட்டுவன் பெயரைக்கூற, பாடலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர்.
பக்தியோ பரவசமோ தனது பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்… நமது மனமெல்லாம் வாசம் வீசுகிறார்







