தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்டுவது, புனிதமான நீர்நிலைகளை அசுத்தமாக மாற்றுவது போன்ற செயல்கள் இயற்கையை பெரிதும் சேதப்படுத்துகின்றன. நமக்கு கிடைத்துள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
உலக சுற்றுச்சூழல் தினம் என்பது வெறும் விழிப்புணர்வு நாளாக மட்டுமல்லாமல், நமது பொறுப்பையும், கடமையையும் நினைவூட்டும் நாளாகும். மரங்களை பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, நீரை சிக்கனமாக பயன்படுத்துவது போன்ற செயல்களில் அனைவரும் ஈடுபட வேண்டும்.
மக்களும், அரசும் இணைந்து செயல்பட்டால் தான் நம் நாட்டை அனைத்து விதங்களிலும் முன்னேற்ற முடியும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது எதிர்கால தலைமுறைக்கான மிகப்பெரிய பொறுப்பாகும். பூமி நமக்குத் தாயாக இருந்து எல்லாவற்றையும் தருகிறது! அதற்கு நன்றிக்கடனாக இயற்கையைக் காப்போம். அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள். “என் நாடு என் வீடு” என்ற உணர்வோடு நாமும் நம் நாட்டை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





